Saturday, September 20, 2008

நிகழ்!!!

நிகழ்!!!!

ஒரு மூன்று வருடங்களுக்கு முன் இருக்கலாம். அப்போதெல்லாம் எனக்கு திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இல்லை என்று சொல்லலாம். ஆனால் ஒரு குழந்தையை எடுத்து வளர்க்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது! என் கணவரின் விதி எங்கள் பாதையை ஒன்று சேர்த்ததுபோல! அப்போது நான் நினைத்திருந்தேன்! என் மகளுக்கு நிகழ் என்று தான் பெயர் வைக்க வேண்டும் என்று. நண்பர்களின் குழந்தை செல்வங்களுக்கெல்லாம் தமிழ் பெயர் வைக்க யோசனை சொல்லும்போதெல்லாம் மறந்தும் இந்த பெயரை சொல்லமாட்டேன். எல்லாம் ஒரு சுய நலம் தான். தப்பா என்ன?
அப்புறம் நான் கருவுற்றிருப்பது அறிந்ததும் நான் என் கணவரிடம் சொன்னேன். எந்த குழந்தையாக இருந்தாலும் "நிகழ்" தான் பெயர். அடுத்த பாதி பெயர் வேண்டுமானால் பெண் அல்லது பையன் போல வைக்கலாம் என்று. அவருக்கும் மகிழ்ச்சி.
அப்புறம் எனக்கு பெண் வேண்டுமென ஆசை. பெண்ணாய் தான் இருக்கும் இருந்தா "நிகழ் இடானியா" என்று வைக்க வேண்டும் என்று சொன்னேன். இறுதி வரை அப்பிடியே நினைத்தேன். காரணம் லத்தீன் அமெரிக்கா புரட்சி வரலாற்றில் பிரபலமான ஒரு கடிதம். முகம் தெரியாத ஒரு தாயின் கடிதம். அதில் இடானியா என்ற தன் மகளுக்கு எழுதியிருப்பாள், பூக்களும், சிரிப்பும் நிறைந்த ஒரு உலகத்தை உனக்கு விட்டு செல்லவே நான் ஆயுதம் ஏந்தி போராடுகிறேன் என்று.அந்த உலகில் நான் உன்னுடன் இருப்பேனோ இல்லையோ தெரியாது ஆனால் அமைதி இருக்கும். இன்றை பற்றிய மகிழ்ச்சியும், விடியலை பற்றிய நம்பிக்கையும் இருக்கும் என்று. அந்த செல்ல மகள் இடானியாவை நினைத்து பொறாமையாக இருந்தது. அவளுக்கு அவள் தாய் நினைத்து கிடைத்ததா என்பதைசரித்திரத்திற்கே விடுவோம். ஆனால் நான் அத்தகைய ஒரு தாயாய் இருக்க முயற்சிக்க வேண்டும் என்று நினைத்து அந்த பெயரை தேர்ந்தெடுத்தேன். ஆனாலும் பல இடர்கள். என் மனதிலும் சில ஒவ்வா நம்பிக்கைகள்.(தெரிகிறது தவறென்று. மாற்றிக்கொள்ள காலம் வேண்டும்) என் மகள் பிறந்ததும் ஆதிரை என்று வைக்கலாம் என்று முடிவெடுத்தோம். அதாவது "நிகழ் ஆதிரை". என் உலகம் இப்போது. "நிகழ்" என்று தான் அழைக்கிறோம். பெரும்பாலும் செல்லக்குட்டி, தங்ககட்டிதான் எல்லோரையும் போல.
இப்போது அவளுக்கு பத்து மாதம் இருபது நாள். யார் மாதிரி என்பதை இன்னும் யோசிக்க வைக்கிறாள். நாலோரி மேனி, பொழுதொரு வண்ணம், வேளைக்கொரு சாயல். எல்லோரையும் திருப்தி படுத்துகிறாள். எல்லோரையும் தன்னைப்போல இவள் என்று நினைக்க வைக்கிறாள். என்னைக்கூட.!!! ஒவ்வொரு அசைவும் என்னையும் என் கணவரையும் வியக்க வைக்கிறது. இப்படி எல்லாமா சின்ன குழந்தைகள் செய்வார்கள் என்று வியக்க வைக்கிறாள். மூக்கை சுழிக்கிறாள், கண்ணை சிமிட்டுகிறாள், வாயை குவிக்கிறாள், இன்னும் என்னென்னவோ!!! கற்றதெல்லாம் கை மண்ணளவு, கல்லாமல் விட்டதெல்லாம் உலகளவு, என் கண்ணம்மா எங்களுக்கு ஏற்படுத்தும் உணர்வு, திகைப்பெல்லாம் வானம், அண்டம் இன்னும் என்னவெல்லாமோ அளவு! திக்கு முக்காடி போயிருக்கிறோம்! நல்லவிதம் இவளை முகப்படுத்த வேண்டுமே என்ற கவலையும் மேலோங்கிகிறது.
இன்னும் நிறைய என் நினைவுக்குமிழ்கள் "நிகழும், நிகழ் சார்ந்தவையும்!!!"

2 comments:

சந்தனமுல்லை said...

நிகழ் ஆதிரை எனும் பேர் வித்தியாசமா அழகா இருக்கு!!
வாழ்த்துக்கள் நிகழ்-க்கும் அம்மாவுக்கும்!!
சுவாரசியமான பதிவு!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நிகழ் என்ற பெயரின் பின்னால் ஒரு சரித்திரமே இருக்கிறது.

ஒவ்வா நம்பிக்கைகள்//
நமக்கென்று ஒரு குழந்தை வந்தபின் எல்லா நம்பிக்கைகளும் வந்துவிடும்
திருஷ்டி கழிப்பதில் ஆரம்பித்து இன்னும் எப்பொருள் யார் யார் வாய் கேப்பினும்