Monday, December 15, 2008

மயிலை பாரு மயிலை பாரு!!!

புதிதாக குறுந்தகடு (சிடிக்கு அதுதானே தமிழில்?) வாங்கினோம். அதில் நிறைய குழந்தைப் பாடல்கள் உள்ளன. அதில் ஒன்று மயிலை பாரு மயிலை பாரு தோகை விரித்து ஆடுது என்ற பாடல். அந்த பாடல் வந்த உடன் என் நிகழ் மயிலைப்போல அகவுகிறாள். என்ன மிருகத்தை பார்க்கிறாளோ அந்த மிருகம் போல் சத்தமிட முயற்சி செய்கிறாள். பிறந்ததில் இருந்து நான் பாடிய தாலாட்டை விட வரிக்கு ஒரு விலங்கு பேர் சொல்லி அதைப்போல மிமிக்ரி செய்து அவள் தூங்கியதே அதிகம். ( இது அவள் என் மிமிக்ரிக்கு கொடுத்த பரிசா இல்லை என் பாட்டுக்கு கொடுத்த தண்டனையா) இப்போதெல்லாம் அவளே ஆரம்பித்து விட்டாள். காகம், நரி, நாய், பூனை, சிங்கம், புலி, முயல், ஆந்தை (ஆம் ஆந்தை தான்.) போல அவளே சத்தம் போடுகிறாள். வார்டு ரோப் கண்ணாடி முன் பாய் நின்று கொண்டு, அவள் அடிக்கும் கூத்து இருக்கிறதே சொல்லி மாளாது. அவள் வயிற்றை தடவுவாள், பின்புறம் கை கட்டி நின்று திரும்பி பார்ப்பாள், வேறு என்ன சேட்டைகளை நம்மிடம் செய்கிறாளோ அதை எல்லாம் கண்ணாடி முன் நின்று செய்து பார்ப்பாள். அவளுக்கு அவளே முத்தம் கொடுப்பாள். சிரித்துக்கொள்வாள். அடடடா!!!இப்படியெல்லாமா நாம் செய்தோம் என்று யோசனையாகவும், இவளுக்கு எப்படி ஈடு கொடுத்து, நல்லது பொல்லாததை முகப்படுத்தப்போகிறோம் என்று மலைப்பாகவும் இருக்கிறது. தூளியை ஆட்டிக்கொண்டு இருக்கும்போது நம்மை கூப்பிட்டு முத்தம் கொடுத்துவிட்டு திரும்ப படுத்துக்கொள்ளும்போது உலகத்தையே வென்ற பெருமையில் உள்ளம் பூரிக்கிறது. காதலுக்கு மரியாதை படத்தில் சங்கீத திருநாளோ என்ற பாடல் எப்போதும் என் பிரிய பாடல் வரிசையில் ஒன்று. அதை இப்போது உளமார அனுபவித்து கேட்கிறேன். பிடித்த ஒரு விஷயம், முற்றிலும் வேறு பரிமாணத்தில் இன்னும் பிடித்தமான விசயமாக மாறும் அதிசயம் புதிது.

Tuesday, December 2, 2008

நடக்கும் குட்டி தேர்!!!

நிகழ் நடக்க ஆரம்பித்து இருக்கிறாள். உடலை சாய்த்து, மெல்ல அடி எடுத்து அவள் வைப்பது தேர், அன்னம், குழந்தை கண்ணன் இன்னும் என்னென்னவோ இனிமையான விசயங்களை நினைவூட்டுகிறது. ஓடிச்சென்று அள்ளிகொள்கிறேன். அவள் ஓடிவந்து கால்களை கட்டிகொள்ளும்போது, வாழ்க்கை மிக இனிமையான ஒன்றாக இருக்கிறது.
அவளுக்கு ஊட்டிவிடும்போது, பிடிவாதம் பிடித்து தானே கையில் வாங்குகிறாள். கீழே கொட்டப்போகிறாள் என்று நினைத்தால், அதை ஊதி (சூடாக இருக்கிறதாம் ) நமக்கு ஊட்டுகிறாள். யாராவது வீட்டு அழைப்பு மணி அழுத்தி விட்டால், அவர்களை திரும்ப போக விட மாட்டேன் என்கிறாள். ( டோர் டெலிவரி செய்ய வருபவர்களை கூட ). பெரியவர்களை எல்லாம் மாமா என்கிறாள். பெண்களை, வயதானவர்களை இன்னும் ஒன்றும் சொல்வதில். சின்னவர்களை எல்லாம் அக்கா என்கிறாள். அண்ணா அக்கா வித்தியாசம் தெரியவில்லை. வேண்டுமென்றே முட்டிவிட்டு சுவரை அடிக்கிறாள். குடலை வுருவிடுவேன் என்று கையிலேயே கத்தியை திட்டுகிறாள்.
நான் மிக சந்தோசமாக இருக்கிறேன்.