Monday, November 9, 2009

ஒரு நாள் என்பது!!!


ஒரு நாள் என்பது எத்தனை மணி நேரம் என்பதே மறந்து போகும் போல இருக்கிறது. நிகழ் தூங்கி எந்திரிக்கும் நேரம் தான் காலை. அது சாயங்காலம் நான்கு மணியாக இருந்தாலும்.!!! மிகவும் கஷ்டப்பட்டு, அவளை இரவு பத்து மணிக்கு தூங்க வைத்தாலும், அந்தர் பல்டி அடித்து இரண்டு மூன்று நாட்கள் தொடர வைத்தாலும், இரவு நான்கு மணி நேரம், பகலில் எட்டு மணி நேரம் தூங்கும் பழக்கத்தை மட்டும் மற்ற முடியவில்லை. இந்தியாவில் ஒழுங்காக இரவு பத்து மணிக்கு தூங்கி காலை ஆறு மணிக்கு எந்திரிக்கிறாள். இங்கே ஷார்ஜா வந்தால் மட்டும் இப்படி செய்கிறாள். இவளை பிஸியாக வைக்க என்ன செய்தாலும், இந்த பழக்கம் மட்டும் மாறவே மாட்டேன் என்கிறது. மறுநாள் காலை போஸ்ட் செய்யவேண்டுமென்று ஆரம்பித்த ப்லோக்கிங் இரு நாட்களாக இழுத்துக்கொண்டிருக்கிறது. டிராபிட் இல் சேமித்து திரும்ப எடுத்து டைப் செய்வதில் ஏகப்பட்ட குழப்பம். யாரவது தமிழில் தட்டச்சு செய்ய இதை விட சுலப வழி இருந்தால் சொல்லுங்களேன் பிளீஸ்.

இப்போது இரவு மூன்று மணி. பத்து மணிக்கு படுத்து இரண்டு மணிக்கு எழுந்தாள். ஒரு ஸ்பூனை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு "அம்மா, பாப்பா மருந்து குடிக்கிறா!!! என்று விளையாடிக் கொண்டிருக்கிறாள். இந்த ஒரு மணி நேரத்தில் இரண்டுவேளை சாப்பிட்டு விட்டேன். எல்லாம் அவள் சமைத்து கொடுத்த செப்பு சாமானில் தான்.!!!! உடற்பயிற்சி செய்ய கூப்பிடுகிறாள். போய்விட்டு அப்புறம் வருகிறேன். பை பை!!!! சி உ!!! டேக் கே !!!! ( நிகழ் பாஷையில் )
Sunday, November 8, 2009

மீண்டும் !!!!!

வெகு நாள்கள் கழித்து ப்லோக் பண்ண வாய்த்திருக்கிறது. அப்பிடி ஒன்றும் முடியாமல், நேரம் இல்லாமல் இல்லை. நிகழ் பின்னால் ஓட ஆரம்பித்தாகி விட்டது என்றாலும், நினைத்திருந்தால், ப்லோக் பண்ணியிருக்கலாம். எப்படியோ இந்த இடைவெளி ஏற்பட்டு விட்டது. பின்னாளில் நிகழ் படிப்பாள். சாரி மா !!!
இனி கொஞ்சம் அடிக்கடி எழுத முயல்கிறேன்.
இந்த இடைவெளியில் நிகழ் நன்றாக வளர்கிறாள். உயரம் வேறு விஷயம்; நிறைய கற்றுகொண்டிருக்கிறாள். நிறைய பேசுகிறாள். என்ன என்பதை நாளை நிறைய எழுதுகிறேன். தொடங்க நினைத்த பின் தளி போடக்கூடாது என்பதால் உடனே ஆரம்பித்தேன். மீதி நாளை. காலையிலேயே.

Saturday, January 17, 2009

பொங்கலோ பொங்கல்!!!

பொங்கலுக்கு எங்கள் கிராமத்திற்கு போயிருந்தோம். நிகழுக்கு ஒரே குஷி. காலையில் எழுந்தால் நம்மையும் எழுப்பி கை பிடித்து மாடு இருக்குமிடத்திற்கு கூட்டிப் போய் விடுகிறாள். கொள்ளுப்பாட்டி, கொள்ளுத்தாத்தா, பெரியம்மா, அண்ணன், மாமா என்று யார் வந்தாலும், அவர்களையும் கை பிடித்து கூட்டி போகிறாள் மாடு பார்க்க. இவள் ஆர்வத்தை பார்த்து, மாட்டை வீட்டு முன் கட்டி போடலாமா என்றே யோசித்தோம். மாட்டுக்கு கொம்பில் பெயிண்ட் அடித்தோம். அப்புறம், பால் கறந்த போதுஅதை குடிக்க வேண்டுமென்று அடம் வேறு.

கையில் பாட்டில் மூடி ஒன்றை எடுத்தாள்வாயில் போட்டு விடப் போகிறாள் என்று பயந்து நான் அதை வாங்கி ஒளித்துவிட்டுகையில் இருப்பதைப்போல ஒரு கையை மூடி அதை அவள் திறக்கும் போது இன்னொரு கைக்கு மாற்றுவது போல மாற்றி, இந்த கையை திறந்து அவள் கவனத்தை விளையாட்டில் திசை திருப்ப முயன்றேன். இதற்கு முன் இப்படி செய்தால் என்ன கேட்டோம் என்று மறந்து விடுவாள். இந்த முறை இந்த கை அந்த கை என்று மாறி மாறி திறந்து பார்த்தவள், திடீரென யோசித்து, பக்கத்தில் இருந்த ஒரு பந்தை திறந்த கையில் வைத்து விட்டு மூடிய கையை திறந்து கொண்டே இப்போது என்ன செய்வாய் என்பது போல பார்க்கவும் அசந்து போய்விட்டேன் நான்.
கரும்பை என்னவோ என்று கையில் வைத்து விளையாடி கொண்டிருந்தாள். அப்புறம் எல்லோரும் சாப்பிடுவதை பார்த்ததும், அவளும் சாப்பிட முயன்றாள். தொண்டையில் சிக்கி கொள்ளும் என்பதால், கொடுக்கவில்லை. ஒரே கோவம் அவளுக்கு. எப்போதும் ஒரு கட்டு கரும்பு காலியாகும் எங்கள் வீட்டில், ஒரு தண்டு கூட காலியாகவில்லை. யாரும் சரியாக சாப்பிடவில்லை என்பது ஊருக்கு கிளம்பும்போது, வேலை பார்பவர்களுக்கு எடுத்து கொடுத்து விட்டு வரும்போதுதான் தெரிந்தது.
நாம் அனுபவித்த எவ்வளவு விசயங்களை நிகழ் மிஸ் பண்ண போகிறாள் என்பது தெரிந்தது.
ஆற்றுகுளியல் - மணல் அள்ளுபவர்களின் உபயத்தில் சீரழிந்த ஈழத்தமிழர் வாழ்வு போல் கிடக்கிறது.

ஜல்லிக்கட்டு - இதற்கென்றே வளர்க்கப்பட்ட மாடுகள் இப்போது எங்கள் ஊர் பக்கம் இல்லவே இல்லை.

பாலத்தில் இருந்து குதிப்பது - ஆற்றில் தண்ணீர் இல்லை மணலும் இல்லை.

புளியமரம் ஏறுவது - கல்வியும், நகரமும், அப்படி குதித்த நமக்குள் இருந்த தைரியத்தை பிடுங்கி விட்டது. நம் பெற்றோர் போல நாம் தைரியசாலிகள் இல்லை.

தேன் மிட்டாய் ஜவ்வு
மிட்டாய் - மீண்டும் கல்வி, சுகாதார விழிப்புணர்வு.

சின்ன சில்வர் குடத்தில் ஆற்றுப்பக்கம் உள்ள கிணற்றில் இருந்து நீர் இறைத்து கொண்டு இருக்கும் அம்மவிடம் சண்டை போட்டு தண்ணீர் பிடித்து சுமந்து வருவது. - குழாய்கள் உபயம்.

எனினும், இப்போது
இவர்கள் அனுபவிக்கும் சில விசயங்கள் நாம் நினைத்து பார்க்காதவை. நம் பெற்றோர் அனுபவித்த சில விசயங்களை நாம் மிஸ் பண்ணவில்லையா? எனவே காலத்தின் கையில் சிலவற்றை விட்டு, நம் கையில் முடிந்தவரை சிலவற்றை எடுத்துக்கொண்டு, நம் வேர்களுடனான உறவை நாம் நம் குழந்தைகளுக்கு அவ்வப்போது, இந்த திருநாள்கள் மூலமாவது புதுப்பித்துக்கொள்வோம்.

Friday, January 9, 2009

இவங்களுக்கு எல்லாம் சிரிப்பா வராதா?

முதல் முறையாக இங்கு பொது விஷயம் பற்றி எழுதுகிறேன். நிகழுக்கான இடம் தானே இது என்று யாரேனும் கேட்கலாம். ஆம். இந்த சமுதாயமும் என் நிகழுக்கானது தானே?
திருமங்கலம் தேர்தல் ரொம்ப ஆரவாரமா நடக்குதுப்பா!!! யார் யார் என்னென்ன கொடுக்கிறாங்கன்னு டி வி ல இவங்க அவங்களப் பத்தியும் அவங்க இவங்கள பத்தியும் மாத்தி மாத்தி சொல்றாங்க. எல்லாரும் கொடுப்பது எல்லாருக்கும் தெரியும். அவங்களுக்கு தெரியும், நமக்கு, தேர்தல் கமிஷனுக்கு, போலிசுக்கு (நான் காமெடி கீமெடி பண்ணலியே?) ஏன் சின்ன பிள்ளைக்கு கூட தெரியும். ஆனா இவர் பேசும்போது அவங்களையும், அவங்க பேசும் போது இவங்களையும், எவ்ளோ உணர்வு பூர்வமா ஆத்திரத்தோட ஐயோ இப்படியும் அநியாயம் நடக்க கண்டமான்னு நிஜமாவே வயிறு எரியிற மாதிரி பேசுறாங்களே, இவங்களுக்கெல்லாம் மேடைல அப்பிடி பேசும்போது சிரிப்பு சிரிப்பா வராதா?

Monday, December 15, 2008

மயிலை பாரு மயிலை பாரு!!!

புதிதாக குறுந்தகடு (சிடிக்கு அதுதானே தமிழில்?) வாங்கினோம். அதில் நிறைய குழந்தைப் பாடல்கள் உள்ளன. அதில் ஒன்று மயிலை பாரு மயிலை பாரு தோகை விரித்து ஆடுது என்ற பாடல். அந்த பாடல் வந்த உடன் என் நிகழ் மயிலைப்போல அகவுகிறாள். என்ன மிருகத்தை பார்க்கிறாளோ அந்த மிருகம் போல் சத்தமிட முயற்சி செய்கிறாள். பிறந்ததில் இருந்து நான் பாடிய தாலாட்டை விட வரிக்கு ஒரு விலங்கு பேர் சொல்லி அதைப்போல மிமிக்ரி செய்து அவள் தூங்கியதே அதிகம். ( இது அவள் என் மிமிக்ரிக்கு கொடுத்த பரிசா இல்லை என் பாட்டுக்கு கொடுத்த தண்டனையா) இப்போதெல்லாம் அவளே ஆரம்பித்து விட்டாள். காகம், நரி, நாய், பூனை, சிங்கம், புலி, முயல், ஆந்தை (ஆம் ஆந்தை தான்.) போல அவளே சத்தம் போடுகிறாள். வார்டு ரோப் கண்ணாடி முன் பாய் நின்று கொண்டு, அவள் அடிக்கும் கூத்து இருக்கிறதே சொல்லி மாளாது. அவள் வயிற்றை தடவுவாள், பின்புறம் கை கட்டி நின்று திரும்பி பார்ப்பாள், வேறு என்ன சேட்டைகளை நம்மிடம் செய்கிறாளோ அதை எல்லாம் கண்ணாடி முன் நின்று செய்து பார்ப்பாள். அவளுக்கு அவளே முத்தம் கொடுப்பாள். சிரித்துக்கொள்வாள். அடடடா!!!இப்படியெல்லாமா நாம் செய்தோம் என்று யோசனையாகவும், இவளுக்கு எப்படி ஈடு கொடுத்து, நல்லது பொல்லாததை முகப்படுத்தப்போகிறோம் என்று மலைப்பாகவும் இருக்கிறது. தூளியை ஆட்டிக்கொண்டு இருக்கும்போது நம்மை கூப்பிட்டு முத்தம் கொடுத்துவிட்டு திரும்ப படுத்துக்கொள்ளும்போது உலகத்தையே வென்ற பெருமையில் உள்ளம் பூரிக்கிறது. காதலுக்கு மரியாதை படத்தில் சங்கீத திருநாளோ என்ற பாடல் எப்போதும் என் பிரிய பாடல் வரிசையில் ஒன்று. அதை இப்போது உளமார அனுபவித்து கேட்கிறேன். பிடித்த ஒரு விஷயம், முற்றிலும் வேறு பரிமாணத்தில் இன்னும் பிடித்தமான விசயமாக மாறும் அதிசயம் புதிது.

Tuesday, December 2, 2008

நடக்கும் குட்டி தேர்!!!

நிகழ் நடக்க ஆரம்பித்து இருக்கிறாள். உடலை சாய்த்து, மெல்ல அடி எடுத்து அவள் வைப்பது தேர், அன்னம், குழந்தை கண்ணன் இன்னும் என்னென்னவோ இனிமையான விசயங்களை நினைவூட்டுகிறது. ஓடிச்சென்று அள்ளிகொள்கிறேன். அவள் ஓடிவந்து கால்களை கட்டிகொள்ளும்போது, வாழ்க்கை மிக இனிமையான ஒன்றாக இருக்கிறது.
அவளுக்கு ஊட்டிவிடும்போது, பிடிவாதம் பிடித்து தானே கையில் வாங்குகிறாள். கீழே கொட்டப்போகிறாள் என்று நினைத்தால், அதை ஊதி (சூடாக இருக்கிறதாம் ) நமக்கு ஊட்டுகிறாள். யாராவது வீட்டு அழைப்பு மணி அழுத்தி விட்டால், அவர்களை திரும்ப போக விட மாட்டேன் என்கிறாள். ( டோர் டெலிவரி செய்ய வருபவர்களை கூட ). பெரியவர்களை எல்லாம் மாமா என்கிறாள். பெண்களை, வயதானவர்களை இன்னும் ஒன்றும் சொல்வதில். சின்னவர்களை எல்லாம் அக்கா என்கிறாள். அண்ணா அக்கா வித்தியாசம் தெரியவில்லை. வேண்டுமென்றே முட்டிவிட்டு சுவரை அடிக்கிறாள். குடலை வுருவிடுவேன் என்று கையிலேயே கத்தியை திட்டுகிறாள்.
நான் மிக சந்தோசமாக இருக்கிறேன்.

Monday, September 22, 2008

என் நிகழ்!!!

உன் உலகம் விரியும்போது என் உலகம் உன் சின்ன கைகளுக்குள் மகிழ்ச்சியோடு சுருங்குகிறது!
என் நிகழ் அவள் வாயில் தின்பண்டங்களை (தின்பண்டம் என்று அவள் நினைப்பதை எல்லாம் ;-) )வாயில் வைக்க பழகிக்கொண்டு இருக்கிறாள். கூடவே எனக்கும் வந்து ஊட்டுகிறாள். என் வாயில் இருப்பதை தோண்டுகிறாள். குக்கர் விசில் சத்தம் கேட்கும்போது கிச்சனில் இருந்தால் பயப்படுகிறாள். வெளியில் இருந்தால் கெகெகெ வென சிரித்துகொண்டே மேலேறி வந்து உட்காருகிறாள். கிரேசி பிராக் பாடல் வந்தால் இமைக்காமல் பார்க்கிறாள். திரும்ப போடச்சொல்லி உம் உம் மென சொல்கிறாள். பூச்சாண்டி பாடலும் அவளுக்கு மிக பிடிக்கிறது. நாம் வேலையாக இருந்தால் பக்கத்தில் வந்து எட்டி பார்த்து சிரிக்கிறாள். எல்லாரையும் நிமிடத்தில் மயக்கி விடுகிறாள். ஏதாவது சொன்னாலோ, கதை சொன்னாலோ புரிந்தது போலவே தலை ஆட்டுகிறாள்.
இவளுக்கு சொல்லித்தரவே நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.